Published : 03 Feb 2020 09:14 AM
Last Updated : 03 Feb 2020 09:14 AM

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: திருப்பூருக்கு குவியும் முகக்கவச ஆர்டர்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து திருப்பூருக்கு லட்சக்கணக்கில் முகக்கவச ஆர்டர் கிடைத்துள்ளன.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது. இந்தவைரஸ் காற்றில் கலந்து அதிகமாக பரவுவதால், தங்களை பாதுகாக்க பலரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கண்ட முகக்கவசத்துக்கு சீனாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து திருப்பூருக்கு லட்சக்கணக்கான முகக்கவச ஆர்டர்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறையினர் கூறும்போது, ‘கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சீனாவில் முகக்கவசம் அணிந்தபடி அனைவரும் வெளியே சென்று வருகிறார்கள். இதனால், அந்நாட்டில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் முகக்கவசம் அதிகளவில் பற்றாக்குறையாக உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து முகக்கவசம் வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

துணி மற்றும் பாலித்தீனால் ஆன முகக்கவசங்களில் கிருமி நாசினிகள் பயன்படுத்தி, தூசுகள் மற்றும் கிருமிகள் தாக்காத அளவுக்கும், மீண்டும் அதனை பயன்படுத்தும் வகையிலும் கேட்டுள்ளனர்.

சீனாவில் உள்ளவர்கள், இங்குள்ள முகக்கவசம் தயாரிக்கும் தொழில் துறையினரை தொடர்புகொண்டு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். என்.95 எனப்படும் முகக்கவசம், 2 லட்சம் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் இருந்து முகக்கவசம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால், 2 லட்சம் ஆர்டர்களை தயார் செய்வது தொடர்பாக குழப்பமாக இருக்கிறது.

தற்போது, உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை, ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசத்துக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, அவற்றை அனுப்பி வருகிறோம். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களையே பலரும் விரும்பி வருகிறார்கள். இவற்றை ஒருநாள் மட்டுமே பயன்படுத்த முடியும்' என்றனர். இந்தியாவில் இருந்து முகக்கவசம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால், 2 லட்சம் ஆர்டர்களை தயார் செய்வது தொடர்பாக குழப்பமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x