

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 4-ம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2020-2021-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துறை அமைச்சர்கள், துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநில பட்ஜெட் தாக்கல் செய்வது, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.