

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாம்பரம் பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனையின் டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைத்து சீனாவில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுடன் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து தமிழகம் வந்த 310 பேர் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதற்கிடையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் ஒருவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் 40 வயதான மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது கணவரை பார்க்க சீனா சென்ற மாலதி சென்னை திரும்பிய போது, அவரை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து, அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்களின் பரிந்துரையின்படி, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் செய்த முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு மிதமான காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை. அவர் நலமுடன் உள்ளார். மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
கரோனா வைரஸ் மூச்சு காற்று, இருமல், தும்மலின் போது 20 சதவீதம் பரவக்கூடும். அந்த வைரஸ் பாதித்தவர்கள் தொட்ட பொருட்களை பயன்படுத்துவதன் வாயிலாக 80% பரவும். இந்த மருத்துவமனையில் 6 பிரத்யேக அறைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் 10 டாக்டர்கள், 20 நர்ஸ்கள், 20 மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, முழு உடல் கவசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.