

திட்ட அனுமதி பெற 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்று இருந்த நிலை மாறி, தற்போது 50 நாட்களாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொழில்துறை சீரிய முன்னேற்றம் கண்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“வளர்ச்சிப் பாதையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உற்ற தோழனாகவும், ஆலோசகராகவும் தொடர்ந்து திகழ்ந்து வரும் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காலந்தோறும் மாறிவரும் அறிவியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நம் நாடும், நாட்டின் தொழில் நிறுவனங்களும் வளர்ச்சி பெற்று புதிய உயரங்களை எட்ட சிஐஐ அமைப்பு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
தொழில் துறையில் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து திகழச் செய்ய வேண்டும் என்ற அம்மாவின் சீரிய கொள்கையின்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடுகளை சிறப்பான முறையில் நடத்தியதில், இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆற்றிய பங்கு மகத்தானது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
மேலும், தொழில் தொடங்குவதை எளிதாக்க, தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு எங்கும் எடுத்துக் கூறியதில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் பங்கு மகத்தானது, போற்றத்தக்கது.
ஜெயலலிதாவால் 2001-ல் தொடங்கி வைத்த Connect என்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த கருத்தரங்கை, தமிழ்நாடு அரசும், சிஐஐயும் இணைந்து இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் தொடர்ந்து இந்தியத் தொழில் கூட்டமைப்பு சீரியப் பங்காற்றி வருகிறது.
எங்கள் அரசு தொழில் துறையை ஊக்குவிக்க பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகளுக்கு உரிய காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், சுய சான்றின் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம் என்ற திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
தொழில் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பச்சை வகைப்பாடு தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணையை நேரடியாக வழங்கும் “Direct CTO” திட்டத்தை அறிவிப்பதில் நான் பெருமகிழ்சியடைகிறேன். இதன்படி, தொழில் பூங்காக்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில், தொழில் தொடங்கும் பச்சை வகைப்பாட்டு நிறுவனங்கள், அதனை நிறுவுவதற்கான இசைவினை ((Consent to establish) பெற, கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தால் போதுமானது.
அந்த இசைவினைப் பெற காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வகையான நிறுவனங்கள் சுய சான்றின் அடிப்படையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம். இயக்குவதற்கான இசைவாணை மட்டும் பெற்றாலே போதுமானது.
ஏற்கெனவே வெள்ளை வகைப்பாட்டு தொழிற்சாலைகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற வேண்டியதில்லை என்ற நடைமுறை உள்ளது. அரசின் இப்புதிய திட்டம் மூலம், பச்சை வகைப்பாட்டில் உள்ள மேலும் 63 வகை தொழிற்சாலைகள் பயன் பெறும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மேலும், நகர் ஊரமைப்புத் திட்டம் இல்லாத (non-plan area) பகுதிகளில், தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச்சாளர முறையில், காலவரையறைக்கு உட்பட்டு வழங்கிடும் புதிய நடைமுறையையும் இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒற்றைச் சாளர முறையில், இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதிகபட்சம் 50 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இல்லாவிடில், நில வகைப்பாடு மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதி, அந்நிறுவனம் பணிகளைத் தொடங்கலாம்.
இத்திட்டத்தின் பயனாக, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் வேளாண்மைத் துறை தடையின்மைச் சான்றும், 15 முதல் 50 நாட்களில் நில வகைப்பாடு மாற்றமும் செய்யப்படும். அதே காலகட்டத்தில் திட்ட அனுமதியும் வழங்கப்படும்.
இதன் மூலம், திட்ட அனுமதி பெற முன்பு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்று இருந்த நிலை மாறி, தற்போது 50 நாட்களாகக் குறையும். அதோடு, deemed approval எனப்படும் கருதப்பட்ட ஒப்புதலும் வழங்கப்படும் என்பதால், எவ்வித கால விரயமும் இன்றி, நிறுவனங்கள் தம் கட்டுமானப் பணிகளைத் தொடங்க இயலும்.
இந்த அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் பல புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து, தொழில் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு, உலகத் தமிழர்களை தொழில் தொடங்க வரவேற்கும் "யாதும் ஊரே" திட்டம், தொழில் முனைவோரின் குறைகளைத் தீர்க்க "தொழில் நண்பன்" என்ற திட்டம்.
இணைய வழி குறைதீர் வசதி, தமிழ்நாட்டின் தொழில் துறையின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் செல்ல "தொழில் வளர் தமிழ்நாடு" திட்டம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் நாடுகளுக்கான அமர்வுகள், தாய்வான் மற்றும் அமெரிக்காவில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் நியமனம்.
மின்சார வாகனப் பூங்கா, உணவுத் தொழில் பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு என பல புதிய முன்முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
எனது தலைமையிலான உயர் மட்டக் குழுவின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு, பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 22 ஆயிரத்து 763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.
இந்த அரசின் நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட 10 துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு எங்கள் அரசு. முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் எங்கள் அரசுதான் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.