

குரூப் 4 - 4 தேர்வில் 2முறைகேடு நடந்ததை அடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கும் முறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
சமீபத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம்,மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 262 பேர் மொத்தமாக தேர்வு எழுதினர் .அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் முதல் 100 தரவரிசையில் 35 பேர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலான தேர்வர்கள் சென்னை, வேலூர், விழுப்புரம், அரக்கோணம்,சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் உள்நோக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. அதுவுமல்லாமல் குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணைக்கு அழைக்கப்பட்ட 96 தேர்வர்களில் பெரும்பாலானவர்கள் கூறிய பதில் இறந்துபோன தம்முடைய மூதாதையர்களுக்காக திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தை தேர்வு செய்தோம். திதி கொடுத்ததுமாதிரியும் ஆச்சு, தேர்வு எழுதியதுமாதிரியும் ஆச்சு என 30-க்கும் மேற்பட்டோர் விசாரணையில் பதிலளித்திருந்தனர்.
இவர்களின் பதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதியில் அங்கு சென்றதாக பெரும்பாலானோர் ஒரே பதிலை கூறியதால் முறைகேடு நடந்தது உறுதியானது.
இந்நிலையில் இந்தப்பிரச்சினையை களைய தேர்வு எழுதும் நபர்கள் வேறு மாவட்டத்திற்கு சென்று முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய முறையை விண்ணப்பத்தில் சேர்த்துள்ளது.
கடந்த 20-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் விண்ணப்பிக்கும்போது இந்த புதிய நடைமுறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் போது தேர்வர் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரா ? அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால் என்ன காரணத்திற்காக தனது சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதாமல் வெளிமாவட்டத்தை தேர்ந்தெடுக்கிறார் என்கிற காரணத்தை தேர்வர்கள் அளிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வர்கள் வேறு மாவட்டத்தை தேர்வு செய்வது வேலைக்காகவா? படிப்பதற்காகவா? என்ன காரணம் என்பது போன்ற காரணத்தை சரியாக கூற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.