

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள மழையால், நிகழாண்டில் மாவிளைச்சல் கைகொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளதாக மா விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இவற்றில் தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல்போன்ஸா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்றவை 5 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. முன் பருவ ரகமான செந்தூரா, பீத்தர் ஆகிய ரகங்கள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் விட ஆரம்பிக்கும். மத்திய பருவ ரகங்களான பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, சேலம் பெங்களூரா, ஜஹாங்கீர், இமாம்சந்த், குதாத் போன்றவற்றில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். கடைசி பருவ ரகங்களான நீலம், மல்கோவா ரக மரங்களில் இலைகள் துளிர்விடும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக வறட்சி, மழையின்மை, விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்துள்ள மழையாலும், பனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாலும் நிகழாண்டில் மா விளைச்சலும், உரிய விலையும் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளதாக மா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முத்தரப்பு கூட்டம்
இதுதொடர்பாக மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயலாளர் சவுந்திரராஜன் கூறும்போது, கடந்த ஆண்டு போதிய மழையின்றி மாவட்டம் முழுவதும் அதிகளவிலான மா மரங்கள் காய்ந்துவிட்டன. 70 சதவீத மாவிளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையிலும், மாவிற்கான உரிய விலை கிடைக்கவில்லை.
ஆனால், 2019-ம் ஆண்டில் பரவலாக ஓரளவிற்கு மழை பெய்துள்ளதால் நிகழாண்ழல் மாமரங்களில் மாங்காய்கள் நல்ல திரட்சியாக கிடைக்கும். அதற்கான உரிய விலையும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், உரிய நேரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டத்தை நடத்தி உரிய விலையை பெற்றுத் தர வேண்டும். கடந்த ஆண்டு இக்கூட்டம் நடைபெறவில்லை. எனவே, நிகழாண்டில் உரிய நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.
மா மரங்களில் தற்போது தான் பூக்கள் வர தொடங்கி உள்ளன. கடந்த ஆண்டு முதலில் அறுவடை செய்த தோட்டங்களில் பூக்கள் பூத்துள்ளன. தோட்டங்களில் மரங்களுக்கு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் மாமரங்களில் முழுவதுமாக பூக்கள் பூக்கத் தொடங்கி விடும், என்றார்.