

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் என்று மத்திய அரசை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜன.21) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காவிரி டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதியாக உள்ள தமிழகம் மற்றும் காரைக்கால் உட்பட புதுச்சேரியும் சேர்த்து வேதாந்தா தனியார் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரகம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அந்தக் கடிதம் எங்கள் அரசுக்கு வந்தது.
அதில் வேதாந்தா நிறுவனமானது நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதிகளில் 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், கடல் பகுதியில் 4,047 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் எரிவாயு கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதில் புதுச்சேரி பாகூரில் 2 சதுர கிலோ மீட்டர் நீளமும், காரைக்கால் பகுதியில் 39 சதுர கிலோ மீட்டர் நீளமும் கையகப்படுத்துவதற்காக வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காரைக்கால் மற்றும் பாகூர் பகுதியில் விவசாயம், மக்கள்தொகை அதிகமாக இருக்கின்ற பகுதியாகும்.
இந்த எரிவாயு 3,500 மீட்டரில் இருந்து 4,500 மீட்டர் வரை எடுக்கப்படும். நேரடியாக ஆழ்துளைக் கிணறுகள் போடுவது மட்டுமின்றி பக்கவாட்டிலும் கிணறுகள் போடப்படும். இதனால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படும். எரிவாயுவைக் கண்டுபிடிக்க ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். இந்த ரசாயனக் கலவைகளால் நிலத்தடி நீர் கீழ்மட்டம் வரை செல்கின்ற வாய்ப்புள்ளது.
மற்ற நிலப்பகுதிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு வரப்படும். அதிலிருந்து வெளியாகும் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும். ஏற்கெனவே இப்பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் காரைக்கால், புதுச்சேரி பாகூர் பகுதியில் தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சும் சமயத்தில் கடல்நீர் அதிக அளவில் உள்புகுந்து, நல்ல நீர் உப்புநீராக மாறும் அபாயம் ஏற்படும்.
இதுபற்றி கடந்த 20.5.2019 அன்று எங்களுக்கு அறிவிப்பு வந்தவுடனேயே, ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, நான் கடிதம் அனுப்பியிருந்தேன். அதேபோல் உள்துறை அமைச்சரகத்தில் இருந்தும் ஒரு கடிதம் வந்திருந்தது. அதற்கு 10.6.2019 அன்று மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினேன்.
சட்டப்பேரவையில் 20.7.2019 அன்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோம். இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில் மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை. நேரடியாகவே வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் போன்ற பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் போடும் திட்டத்தை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகும். மக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறவில்லை. எதேச்சதிகார நோக்கத்தோடு மத்திய அரசானது இந்த திட்டத்தை தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்துவற்கு நாங்ளே அனுமதி அளிக்கிறோம் என்று கூறியிருப்பது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரி, காரைக்காலில் எந்த அளவுக்கு மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எனவே பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் நான் கடிதம் எழுதி, எந்த காலக்கட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம். நீங்கள் அனுமதி இல்லாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் மாநில அரசே தடுத்து நிறுத்தும். ஆகவே உடனடியாக அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளேன்.
மாநில மக்கள், விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் எங்களுக்கு முக்கியம். மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவு குறையும் என்பதை அறிந்துகொள்ளாமல் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவது மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது தெரிகிறது.
இந்தத் திட்டத்தை ஏன்? வடநாட்டில் கொண்டு வரவில்லை. மற்ற மாநிலங்களில் இதனைக் கொண்டு வராமல், தமிழகம், புதுச்சேரியில் மட்டும் கொண்டு வரக் காரணம் என்ன? தற்போது போராட்டம் ஆரம்பித்துள்ளது. விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். மக்கள் விரோதப் போக்குடன் மத்திய அரசு செயல்படுவது வருத்தத்துக்குரியது.
அகழ்வாராய்ச்சி, மீனவர் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, ஹைட்ரோகார்பன் திட்டம் என எதுவாக இருந்தாலும், மத்திய அரசு தான் நினைப்பதை மக்கள் மத்தியில் திணிப்பதை ஏற்க முடியாது. ஆகவே, மத்திய அரசு தங்களுடைய உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். வேதாந்தா நிறுவனத்துக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும். மீறி நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயமாக நாங்களே முன்னின்று அதனைத் தடுத்து நிறுத்துவோம். எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.