

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி நிறைவு பெற்றது. காவல் ஆய்வாளர் ஒருவரின் காளை சீறிப் பாய்ந்து களத்தில் நின்று விளையாடி பரிசைப் பெற்றது.
அவனியாபுரம், பீளமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளாகும். இதில் முதலில் நடப்பது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. இந்தப்போட்டி இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளைப் பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75 பேர் காலத்தில் இறக்கப்படுகின்றனர்.
போட்டியைக் கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் போலீஸார் பாதுகாப்பு, வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடம்பெற்று போட்டி நடத்தப்பட்டது.
பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டைக் காண அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் அவனியாபுரம் வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை தொடங்கி வைத்தார். காலை முதலே காளைகளை அடக்க காளையர்கள் உற்சாகத்துடன் களம் கண்டனர். பெரும்பாலான காளைகள் அடக்கப்பட்டன. கடந்த ஆண்டு களத்தில் நின்று விளையாடிய ஒரு காளை இந்த ஆண்டு வாடிவாசலை விட்டு வெளியே வரவில்லை.
10 நிமிடத்துக்கும் மேலாகக் கெஞ்சியும் வராததால் காளையைப் பிடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர் வெளியே வந்து சுற்று சுற்றி நின்று விளையாடிவிட்டுச் சென்றது. காளைகளை ஒவ்வொருவரும் அடக்கும்போது அதற்கு வர்ணணையாளர் கொடுக்கும் கமெண்ட்டுகள் பொதுமக்களை அதிகம் கவர்ந்தன.
அடிக்கடி காளைகளைப் பிடித்த மொட்டை போட்டிருந்த இளைஞர் ஒருவரைக் குறிப்பிட்டு, ‘மொட்டை தம்பி பைக்க வாங்காமல் போக மாட்டார் போல’ என்று கமெண்ட் அடித்தனர். ஒருகாளையை நான்கைந்து பேர் சேர்ந்து மடக்கியபோது, ‘இருங்கப்பா. அவர்கள் மொத்தமாக காளையுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பேசிவிட்டு மெல்ல வரட்டும்’ என கமெண்ட் அடித்தனர்.
காளைகள் முட்டியதில் வீரர்கள் 55 பேர் காயமடைந்தனர். இதைத் தவிர எவ்வித அசம்பாவிதம் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுகளைப் பிடிக்கக் குழு, குழுவாக வீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டனர். ஒரு குழு ஒரு மணிநேரம் மட்டும் களத்தில் நின்று காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, பட்டு சேலை, வேஷ்டி-துண்டு, தங்கக்காசு, வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் காளை உள்பட பலரின் காளைகள் களத்தில் நின்று மிரட்டின, நின்று விளையாடும் எனச் சொல்வார்கள் அதன்படி நின்று விளையாடின.
இதில் 10 நிமிடங்கள் களத்தில் நின்று விளையாடி கெத்து காட்டியது புதுக்கோட்டை அனுராதாவின் காளை. அது யாரையும் நெருங்க விடாமல் வளைந்து வளைந்து மிரட்டியது. அதை அனைவரும் ரசித்தனர். மற்ற காளைகளை அடக்கிய காளையர்களின் பாச்சா அதனிடம் பலிக்கவில்லை. இறுதியில் அந்தக் காளையே சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது.