

கல்வி நிறுவனங்களில் ராகிங்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.
ராகிங் ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் 6-வது கூட்டம் ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது. ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், டிஜிபி அசோக்குமார், ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா பேசுகையில், ''மாணவர்கள் சுதந்திரத்தின் எல்லையை மீறும்போது அது ராகிங் உள்ளிட்ட தீய செயல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. ராகிங்கில் ஈடுபட்டால் நடவடிக்கைக்கு ஆளாவதுடன் தங்கள் எதிர்கால வாழ்க்கையும் பாழாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்களில் ராகிங்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் இதற்கான பணிகளை மாவட்ட அளவிலான ராகிக் தடுப்பு குழுக்களும் கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய தினம் தகவல் தொழில்நுட்பத்துறையில் நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம். ராகிங் குறித்து புகார் செய்ய ஹெல்ப்லைன் வசதி உள்ளது. இதேபோன்று ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக புகார் செய்யும் வசதி குறித்தும் சிந்திக்கலாம்'' என்று ரோசய்யா பேசினார்.