

சிறப்பு எஸ்.ஐ. வில்சனின் மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகள் தந்தை இறந்ததை முழுமையாக உணர முடியாமல், ‘அப்பா! எப்போது வீட்டுக்கு வருவார்?’ என கேட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை மனமுருகச் செய்தது.
வில்சனின் இளைய மகள் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் குழித்துறை பகுதியிலுள்ள மனநலம் குன்றியோர் பள்ளியில் படித்து வருகிறார். தனது மனைவி மற்றும் மூத்த மகளைவிட வினிதாவிடம் வில்சன் அதிக பாசம் வைத்திருந்தார். வினிதாவை கவனிப்பதற்காவே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார் வில்சன்.
இந்நிலையில் பணியின்போது சுட்டுக் கொலை செய்யப்பட்ட வில்சனின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தந்தை இறந்ததை நம்ப முடியாத நிலையிலும் வினிதா கதறி அழுதவர், வில்சனின் உடலை அடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட பின்னரும், ‘‘அப்பா, வேலைக்கு சென்று விட்டு எப்போது வீட்டுக்கு வருவார்?’’ என கேட்டவாறு கதறினார். தந்தை உயிரோடு இருப்பதாக நினைத்து அவர் அழுதது அங்கு நின்ற உறவினர்கள் மற்றும் போலீஸாரின் நெஞ்சை உருக்கியது.