ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: ரேடிசன் ப்ளூ ஓட்டல் சேர்மனிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்ட விவகாரம் தொடர்பாக ரேடிசன் ப்ளூ ஓட்டல் சேர்மனிடம் சிபிசிஐடி பிரிவு போலீஸார் நேற்று நேரில் அழைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 2013-ல் நடந்தபோது கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக சிபிசிஐடி பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய நிர்வாகிகள் என 13 பேர் கைது செய்யப்பட்டனர். 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக சிபிசிஐடி பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணையைத் தொடங் கியுள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிலருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை ரேடிசன் ப்ளூ ஓட்டல் சேர்மன் விக்ரம் அகர்வால் எழும்பூரில் உள்ள தமிழக சிபிசிஐடி பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

அவரிடம் போலீஸார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அனைத்து விவ ரங்களும் எழுத்துப்பூர்வமாக பெற்றதாகவும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக மேலும் சிலரிடம் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in