மதுரையில் கட்டிட ஒப்பந்ததாரரின் மேலாளருக்கு கொலை மிரட்டல்: நடிகர் வடிவேலு உறவினர்கள் மீது வழக்குப் பதிவு

மதுரை காவல் ஆணையர் அலுவலகம். உள்படம்: காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகம். உள்படம்: காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
Updated on
1 min read

மதுரையில் கட்டிட ஒப்பந்ததாரரின் மேலாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வடிவேலுவின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை புதூர் சம்பளக்குளம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் சதீஸ்குமார். இவர், சிட்டி பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மேலாளர் கோவிந்தராஜ். இவர் கடந்த 31-ம் தேதி அலுவலக வேலை நிமித்தமாக சதீஸ்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு மணிகண்டன், பெண் உட்பட 3 பேர் கல்யாணப் பத்திரிகை வைப்பதாகச் சொல்லி சதீஸ்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் சதீஸ்குமார் எங்கே என விசாரித்துள்ளனர். அதற்கு மேலாளர் கோவிந்தராஜைத் தகாத வார்த்தைகளில் திட்டியும், வயிற்றில் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளனர். மணிகண்டன் கோவிந்தராஜின் கன்னத்தில் அடித்ததோடு, கழுத்தில் கால் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின் மணிகண்டன் உள்ளிட்ட மூவரும் சதீஸ்குமார் வீட்டிலிருந்து சென்றனர்.

இது தொடர்பாக கோவிந்தராஜ் மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சதீஸ்குமாரைத் தேடி வந்த மணிகண்டன் உட்பட மூவரும் நடிகர் வடிவேலுவின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் உட்பட 3 பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மதுரை புதூர் போலீஸாரிடம் கேட்டபோது, "கோவிந்தராஜ் கொடுத்த புகாரில் வடிவேலுவின் தூண்டுதலின் பேரில் மணிகண்டன் உட்பட 2 பேர் சதீஸ்குமாரைக் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி, மணிகண்டன் மற்றும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். நடிகர் வடிவேலுவின் பெயர் வழக்கில் இடம் பெறவில்லை என்றாலும், அது குறித்துத் தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.

வடிவேலு தூண்டுதல்?

கோவிந்தராஜை மிரட்டிய புகாரில் நடிகர் வடிவேலுவின் உறவினர்கள் மூவர் மீதும் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடிவேலு தூண்டுதலின்பேரில் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் எனப் புகாரில் குறிப்பிட்டு இருந்தாலும், அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

பெயர் குறிப்பிடாமல் இருவர் என்று மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகே வடிவேலுவின் பெயரைச் சேர்ப்பது குறித்துத் தெரியவரும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in