

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட மிக் பெரிய ஊராட்சி. தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது .
இந்த ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாங்குடி என்பவர் தனது மனைவி தேவி மாங்குடியை ஊராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தினார்.
இதே போல் பிரபல தொழிலதிபர் ஐயப்பன் தனது மனைவி பிரியதர்ஷினி ஐயப்பனை நிறுத்தினார். இவர்கள் இருவருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது.
இரண்டாம் கட்டமாக கடந்த 30-ம் தேதி நடந்த வாக்குப்பதிலில் 11, 924 வாக்குகள் பதிவானது. கடந்த 2 தேதியன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது தேவி மாங்குடி 318 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துவெற்றி சான்றிதழ் வழங்கினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி ஒரு பெட்டி வாக்கு எண்ணப்படவே இல்லை பதிவான வாக்குகளை விட எண்ணிய வாக்குகள் குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் விவரங்கள் கேட்டறிந்து மறு வாக்கு நடத்த உத்தரவிட்டார் உடனே நள்ளிரவில் தேர்தல் முடிவு அறிவிக்கும் அதிகாரி தேவி மாங்குடி வெற்றி ரத்து செய்யப்படுவதாகவும் மறு வாக்கு நடத்தப்படும் என அறிவித்து பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு அதிகாலையில் தேவியின் முகவர்கள் இல்லாத நிலையில் ஒரு வேட்பாளர் முகவர்களை மட்டும் வைத்து மறு வாக்கு நடந்தது. இதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஒலிபெருக்கியில் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் அறிவித்தனர்.
ஆனால் தேவி மாங்குடி, பிரியதர்ஷினி ஐயப்பன் ஆகிய இருவரும் தாங்கள் வெற்றி பெற்றதாக காரைக்குடி ,சங்கராபுரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் யார் வெற்றி பெற்றது யார் என்று குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவருடைய மனுவில்" சங்கராபுரம் பஞ்சாயத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 599 வாக்காளர்கள் உள்ள நிலையில் 15,906 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்ட அன்று 5871 வாக்குகளை, நான் பெற்ற நிலையில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி 5809 வாக்குகள் பெற்றிருந்தார். இதையடுத்து அதிகாலை ஒரு மணி அளவில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது இதை தொடர்ந்து நான் வீட்டுக்கு சென்ற நிலையில், சுமார் 5 மணி அளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினரின் அழுத்தமும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே பிரியதர்ஷினி பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்தும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.