

ஊத்தங்கரை ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 22 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக 8 இடங்கள், அதிமுக 6 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடம், பாமக 3 இடங்கள், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் வார்டு எண் 11-ல் திமுகவைச் சேர்ந்த உஷாராணியும், வார்டு எண் 12-ல் அவரது கணவர் குமரேசனும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் குமரேசன் திமுகவில் மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளராக உள்ளார். உஷாராணி ஏற்கெனவே, மூன்றாம்பட்டி ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்தவர்.
இதுகுறித்து திமுக கவுன்சிலர் உஷாராணி கூறுகையில், "மூன்றாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் தலைவராக இருந்தேன். தலைவராக இருந்த காலகட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துக் குக்கிராமங்களுக்கும் ஏராளமான அடிப்படை வசதிகளான சாலை, தெரு விளக்குகள், வீடு இல்லா ஏழைகளுக்கு வீடு வழங்கியுள்ளேன். பட்டா, முதியோர் உதவித்தொகை, அரசு கட்டிடங்கள் என பல்வேறு திட்டங்களை இந்தப் பகுதியில் செய்துள்ளேன்.
என்னை இப்பகுதி மக்கள் ஒன்றியக் கவுன்சிலராகத் தேர்வு செய்துள்ளனர். 'மக்கள் பணியே மகேசன் பணி' என்பதற்கேற்ப மக்களுக்குச் சேவை செய்வேன். இனி வரும் காலங்களில் 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் அரசின் அனைத்துச் சலுகைகளும் மக்களுக்குக் கிடைக்க முயற்சி செய்வேன்" என்றார்.