

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 12 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு, 234 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதில் 4 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 81 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். எனவே 23 ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு, 149 பேர் போட்டியிட்டனர்.
அதிமுக 21 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும், தேமுதிக ஒரு இடத்திலும், பாஜக 21 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 67 இடங்களிலும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்றும் (ஜன.3) நடைபெற்று வருகிறது.
இதில், வார்டு எண் 1, 2, 6-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழனிசாமி, ராஜ்குமார், பூதட்டியப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
வார்டு எண் 3, 4, 8, 10, 11, 13, 14, 16, 18, 19, 20, 21-ல் மம்தா, அனிதா, ஷேக் ரஷீத், லட்சுமி, சசிகலா, சித்ரா, கலையரசி, பழனி, மணிமேகலை நாகராஜன், வித்யா, சங்கர், கதிரவன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதே போல், வார்டு எண் 5, 7, 9, 12, 15, 17, 23-ல் அதிமுகவைச் சேர்ந்த ரவிக்குமார், விமலா, வெங்கடாசலம் (எ) பாபு, ஜெயா, வள்ளி, சங்கீதா, ரத்தினம்மாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனனர்.
வார்டு எண் 22-ல் பாமகவைச் சேர்ந்த மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 23 வார்டுகளில் திமுக 12 இடங்களையும், அதிமுக 7 இடங்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.