இலவச வேட்டி - சேலை திட்டத்தில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இலவச வேட்டி - சேலை திட்டத்தில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உரிய விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி - சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, நடவடிக்கை கேட்டு திருப்பூரைச் சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளை 3 சேலைகளை மட்டுமே நெய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் எங்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்”.

இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் கொடுத்த மனு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூன்று மாதத்திற்குள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in