Published : 02 Jan 2020 07:39 AM
Last Updated : 02 Jan 2020 07:39 AM

மியூசிக் அகாடமியின் 93-வது ஆண்டு சதஸ்; சங்கீதமும் சாஹித்யமும் சமமாக இருக்கவேண்டும்: சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா அறிவுறுத்தல்

மியூசிக் அகாடமியின் சதஸ் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, சங்கீதமும் சாகித்யமும் சமமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

மியூசிக் அகாடமியின் 93-வது மார்கழி இசை விழாவின் சதஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டாக்டர் எஸ்.சௌம்யாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதும், விதூஷி சீதா நாராயணன், விதூஷி எம்.எஸ். ஷீலா ஆகியோருக்கு ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருதும், நாதஸ்வர வித்வான் வியாசர்பாடி ஜி.கோதண்டராமன், வித்வான் வி. ராஜ்குமார் பாரதி ஆகியோருக்கு ‘டிடிகே’ விருதும், டாக்டர் ஆரத்தி என்.ராவுக்கு ‘இசை ஆய்வறிஞர்’ விருதும் வழங்கப்பட்டன.

இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, தன்னுடைய தாய் அம்புஜம் கிருஷ்ணா பாடல்கள் எழுதிய நினைவுகளைக் குறித்தும் தாய்மொழியின் அவசியம் குறித்தும் விரிவாக தன்னுடைய உரையில் பேசியதாவது:

"மியூசிக் அகாடமியில் காலையில் நடந்த சில கருத்தரங்குகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் மியூசிக் அகாடமியின் மாணவர்கள் நடத்திய கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரி்த்திரத்தை எஸ்.சௌம்யாவின் வழிநடத்துதலில் மாணவர்கள் அபாரமாக நிகழ்த்திக் காட்டினர். அந்த நிகழ்ச்சி முடியும்போது அனைவரும் கண்ணீர் சிந்தினர். என் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. சங்கீதமும் சாஹித்யமும் சரிசமமாகப் பிணைந்ததில் எழுந்த உணர்ச்சிப் பிரவாகம் அது.

ஒருசிலரின் இசை நிகழ்ச்சிகளையும் கேட்டேன். எஸ்.சௌம்யாவின் கச்சேரியில் அருணாச்சல கவிராயரின் பாடலை அவர் பாடியபோது, அந்த இசையிலும் சாஹித்யத்திலும் இன்றைய இளம் தலைமுறையினரும் மெய்மறந்து போனதைப் பார்த்தேன்.

கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம், ஆண்டாளின் திருப்பாவை என ஆயிரமாயிரம் சாஹித்யங்கள் தமிழில் இருக்கின்றன. சரித்திரரீதியாகவே தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அமைந்த கீர்த்தனைகளை ரசிப்பதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. `எறும்பூரக் கல்லும் தேயும்’ என்பார்கள். அத்தகைய எறும்பாக என்னையும் கருதிக் கொண்டுதான் தமிழ் அன்னைக்கு உரிய மரியாதையை தமிழ் சாஹித்யங்களைப் பாடுவதன் மூலமாக செய்யச் சொல்கிறேன். மியூசிக் அகாடமியின் `சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற கலைஞர்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

முன்னதாக மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தன்னுடைய வரவேற்புரையில், சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, உலக அரங்கில் பல்வேறு விருதுகளை அவர் சார்ந்த நிறுவனம் பெறுவதற்கு காரணமாக இருந்த தருணங்களை விவரி்த்து, அவரைப் பாராட்டினார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களைப் பாராட்டினார்.

சங்கீத கலாநிதி விருதுபெற்ற டாக்டர் எஸ்.சௌம்யா தன்னுடைய ஏற்புரையில், இந்த விருதைப் பெறுவதற்கு காரணமாக இருந்த தன் பெற்றோருக்கும் குரு பரம்பரையினருக்கும், மியூசிக் அகாடமிக்கும், உடன் வாசித்த கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை காணிக்கையாக்கினார்.

சங்கீத கலாநிதி விருது பெற்ற டாக்டர் எஸ்.சௌம்யாவை வயலின் வித்வான் ஆர்.கே.ராம்குமாரும் `சங்கீத கலா ஆச்சார்யா’ விருது பெற்ற சீதா நாராயணன், எம்.எஸ்.ஷீலா, `டிடிகே’ விருதுபெற்ற நாதஸ்வர வித்வான் வியாசர்பாடி ஜி. கோதண்டராமன், வித்வான் வி. ராஜ்குமார் பாரதி, `இசை அறிஞர்’ விருதுபெற்ற டாக்டர் ஆரத்தி என்.ராவ் ஆகியோரை டாக்டர் ரீட்டா ராஜன் பாராட்டிப் பேசினார். வித்வான் ராஜ்குமார் பாரதி விருதுபெற்ற கலைஞர்களின் சார்பாக நன்றியுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x