விருதுநகர் அருகே கட்சிகளால் பகை ஏற்படுவதை தடுக்க கொடி, தேர்தல் விளம்பரம் இல்லாத வினோத கிராமம்

விருதுநகர் அருகே கட்சிகளால் பகை ஏற்படுவதை தடுக்க கொடி, தேர்தல் விளம்பரம் இல்லாத வினோத கிராமம்
Updated on
2 min read

ஊராட்சித் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டபோதிலும் ஊருக்குள் அரசியல் கட்சிகள் புகுந்தால் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பகைமை உண்டாகும் என்பதால் கட்சிக் கொடிகளுக்கும், தேர்தல் விளம்பரங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருதநத்தம் கிராம மக்கள் தடை விதித்துள்ளனர். அதை 72 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர்

விருதுநகர் ஒன்றியத்துக்குட் பட்ட ஆமத்தூர் அருகே சுமார் 400 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமம் மருதநத்தம். இங்கு வசிக்கும் மக்கள் பெரும் பாலானோர் விவசாயிகள். ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஆறு சமுதாய மக்களும் சகோதர உணர்வுடன் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்ற சிறிது காலத்தில் மருதநத்தம் கிராமத்தில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். அப்போது கிராம மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்போது ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கட்சிக் கொடிகளால் மக்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடு, விரோதம் ஏற்படுகிறது. இத னால் யாரும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் நிர்வாகி யாகவோ, உறுப்பினராகவோ இருந்து கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் எந்தக் கட்சி கொடிக்கம்பமும் நடக்கூடாது. எந்த கட்சிக் கொடியும் கட்டக் கூடாது.

பேனர்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் என எதுவும் ஒட்டக் கூடாது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் ஓட்டுக்கேட்க வந்தால், வேட்பாளருடன் இருவரை மட்டுமே கிராமத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் ஊர் பெரியவர்களால் விதிக்கப்பட்டன.

ஆண்டுகள் பல ஆனாலும் முன்னோர்கள் விதித்த கட்டுப்பாடு களை இளைஞர்கள் வரை இன்றும் பின்பற்றி வருகின்றனர் மருதநத்தம் கிராமத்தினர்.

திருமணம், காது குத்து, பூப்புனித நீராட்டு விழா, கிரகப் பிரவேசம் ஆகியவற்றுக்காக இளைஞர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆசைப்பட்டால் இதற்காக கிராம எல்லையில் ஒரு சுவர் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு, விழா நாள் காலை போஸ்டர்களை ஒட்டலாம். மாலையில் அகற்றிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இன்று வரை பின்பற்றப்படுகிறது.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் ஊருக்குள் வரும்போது அவர் களை வரவேற்று பேனர்கள் வைப்பதற்கும், தோரணங்கள், வரவேற்புக் கொடிகள் கட்டு வதற்குக்கூட மருதநத்தம் கிராமத்தில் அனுமதியில்லை. கட்சி விசுவாசிகள் தங்களது கட்சித் தலைவர்களின் படங் களையும், சின்னங்களையும் தங்களது வீட்டுக்குள் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். சொந்த வீடாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியில் கட்சி சார்ந்த படமோ, போஸ்டர்களோ ஒட்டுவதற்கு இக்கிராமத்தில் அனுமதியில்லை.

இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மருதநத்தம் ஊராட்சியில் 2-ம் வார்டு உறுப்பினராக செல்வி, 3-ம் வார்டு உறுப்பினராக அழகுத்தாய், 5-ம் வார்டு உறுப்பினராக ரமேஷ்குமார், 6-ம் வார்டு உறுப்பினராக சமுத்திரக்கனி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். ஆனாலும், ஊருக்குள் எந்த சின்னமோ, கட்சிக் கொடியையோ இன்று வரை அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுடன் தேர்தலை சந்திக்கின்றனர் மருத நத்தம் கிராம மக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in