புதிய மாற்றத்தின்படி அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: பிபிஎஃப் கணக்கில் பெறும் கடன் தொகைக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு

புதிய மாற்றத்தின்படி அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: பிபிஎஃப் கணக்கில் பெறும் கடன் தொகைக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு
Updated on
2 min read

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் வைப்புத் தொகையை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தொடர் வைப்பு, கால வைப்பு, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ், அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் 2.8 கோடி அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டலத்தைப் பொறுத்தவரை 58 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்த சேமிப்புத் திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய நிதித் துறை அமைச்சகம், கடந்த 12-ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், செலுத்தப்படும் பணத்தை ஓர் ஆண்டு வரை திரும்ப எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. இது மூத்தக் குடிமக்களுக்கு அசவுகரியமாக இருந்து வந்தது. குறிப்பாக, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு அவர்களால் தங்களுடைய சொந்தப் பணத்தை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். முன்புபோல் ஓர் ஆண்டு முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை. அதேபோல், இக்கணக்கை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். அதேசமயம், இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது, அதற்கான வட்டி வழங்குவதில் பழைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும்.

இதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியில் வாங்கும் கடன் தொகையை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கும் போது முன்பு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என இருந்தது.

அது தற்போது ரூ.250 ஆக குறைக்கப்பட்டது. அந்த 250 ரூபாயையும் முன்பு முழுமையாக செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது, ரூ.50 என்ற அளவில் வருடத்துக்கு 5 முறையாக ரூ.250 செலுத்தலாம். தொடர் வைப்பு கணக்கில் (ஆர்.டி.) முன்பு ரூ.10 கூட செலுத்தலாம் என்றிருந்தது. தற்போது ரூ.100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகையாக முன்பு ரூ.50 செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையான 500 ரூபாயை பராமரிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.

தற்போது ரூ.500-க்கு குறைவாக இருப்பு வைத்துள்ள சேமிப்புக் கணக்குகள் ஓராண்டுக்குள் ரூ.500 இருப்புத் தொகை பராமரிக்கும் கணக்குகளாக மாற்றப்படும். அதேபோல், சேமிப்புக் கணக்குகளில் முன்பு ரூ.5, ரூ.10 என குறைவான தொகையை கூட எடுக்கலாம் என்றிருந்தது. இனிமேல், 50 ரூபாய்க்கு குறைவான தொகையை எடுக்க முடியாது.

சேமிப்புக் கணக்குகளை பராமரிப்பதற்கான செலவை ஈடுகட்ட இந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்புக் கணக்குகளை ஒப்பிடும்போது, இந்த இருப்புத்தொகை குறைவாகும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in