

இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. நாகரிமானவர் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, செய்தியாளர்களிடம் பேசினார்.
''இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. அவர் மனைவி, மகன், பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர், நாகரிமானவர். அதிமுக அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவே இளங்கோவனுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
அதிமுகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்'' என்று குஷ்பு கூறினார்.