

குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பதிவு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் தம்பதியர் காத்திருக்க வேண்டி உள்ளது.
சமூகத்தில் ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிமையான குடும்பச் சூழலை உருவாக்கும் நோக்கில் தத்தெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் www.cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தத்தெடுப்பதற்கு தம்பதியின் திருமணப் பதிவு, உடற்தகுதி, பணி, ஆண்டு வருமானம் மற்றும் பிறப்புச் சான்றுகள், புகைப்படம், பான் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.
கூட்டு வயது வரம்பு
4 வயது வரையுள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியின் கூட்டு வயது 90-க்குள் இருக்க வேண்டும். 4 - 8 வயது குழந்தையை தத்தெடுப்பதற்கான கூட்டு வயது அதிகபட்சம் 100 வரையும், 8 - 18 வயது குழந்தையை தத்தெடுப்பதற்கான கூட்டு வயது அதிகபட்சம் 110 வரையும் இருக்கலாம்.
குழந்தையை தத்தெடுப்பதற்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் தம்பதியின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தத்து கொடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். இதுதொடர்பாக சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி குழந்தைகளை தத்தெடுக்க பதிவு செய்துவிட்டு 3,286 தம்பதியர் காத்திருக்கின்றனர். ஆனால், தத்து கொடுக்கப்பட 290 குழந்தைகள்தான் உள்ளனர். எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் குழந்தைகளை தத்து கொடுத்து வருகிறோம்.
2 சட்டங்கள்
தத்தெடுக்கும் நடைமுறையை 2 சட்டங்கள் முறைப்படுத்துகின்றன. முதலாவதாக, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், இந்து மதத்தினர் நீதிமன்ற ஒப்புதலுடன் குழந்தையை தத்தெடுப்பது, தத்து கொடுப்பதை மேற்கொள்ளலாம். பலரும் இந்த சட்டத்தையே பின்பற்றுகின்றனர்.
இரண்டாவதாக, இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் மட்டுமே சமூக பாதுகாப்பு துறையால் தத்து கொடுக்க முடியும்.
குழந்தையை தத்து கொடுக்க விரும்புபவர்கள் மத்திய தத்து வள ஆதார மையத்தில் குழந்தையை அளிக்க முன்வந்தால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.