

மத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மதுரையில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் 700-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் கண்டன போராட்டம் நடத்துகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மதுரை சின்னக்கடை வீதியில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், பேராயர் அந்தோணி பாப்புசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுக மாநகர் மாவட்ட செயலர் பூமிநாதன், தொழிற்சங்க மாநில நிர்வாகி மகப்பூஜான், கம்யூ., நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விஜய ராஜன் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகள், ஆதிதமிழர் பேரவையினர், வன வேங்கை அமைப்பு, தமிழ் தேசிய பேரியக்கம், மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய 100 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தெற்குவாசல் கிரைம் பிராஞ்ச் பகுதியிலுள்ள குப்புப்பிள்ளை தெருவில் எஸ்டிபிஐ கட்சியினர் குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முஜூபுர் ரகுமான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து வலியுறுத்துவது என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதியில்லை இல்லை என்றாலும், மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்துவிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.