

விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணித் தலைவர் யுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக யுவராஜ் இன்று (டிச.19) வெளியிட்ட அறிக்கையில், "18.12.2019 அன்று விவசாயிகளுக்கு 7% வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு வழங்கியுள்ள உத்தரவில், விவசாயிகளாக இல்லாதவர்களுக்கும் 7% வட்டியில் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாகக் கூறி 11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் இத்துடன் நிறுத்தப்படுகிறது என்றும் அக்டோபர் 1 முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, வரும் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடனுக்கான வட்டியை 7% இருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கான 9.25% வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50% வட்டியையும் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.