குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். உயர் நீதிமன்றத்தின் பிரதான வாயில் முன்பு சுமார் 30 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் பெறப்படும் வரை தங்களின் போராட்டம் தினமும் இதேபோல் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in