

‘‘ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதே எங்களுக்கான பலம்’’ என, உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தேமுதிகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச்., 27, 30 என, இரு கட்டமாக நடக்கிறது. மதுரையைப் பொருத்தவரை அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், தெற்கில் 13 பேரும், வடக்கில் 6 பேரும் ஒன்றிய கவுன்சிலருக்கும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள தேமுதிக வேட்பாளர்கள் தங்களுக்கான கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.
தெற்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஒன்றியங்கள் இடம் பெற்றுள்ளதால் 13 ஒன்றிய கவுன்சிலர்களும், ஒரு மாவட்ட கவுன்சிலரும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது என்றும், ஏற்கனவே திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிட்டு எம்எல்ஏ பதவியை வென்றதால், இப்பகுதியில் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால் தெற்கு மாவட் டத்தில் போட்டியிடும் உள்ளாட்சி பதவிகளை வென்றெடுப்போம் என, அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்த தெற்கு மாவட்ட செயலர் அழகர் கூறியது:
அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்டுக் கொண்ட வெற்றி வாய்ப்புள்ள வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். இதன் மூலம் தேவையான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எடுத்துரைப்போம்.
அதிமுக கூட்டணி என்பதும் எங்களுக்கான வெற்றிக்கு பலமாக இருக்கும் என நம்புகிறோம். மேலும், கூடுதல் வலுச்சேர்க்கும் வகையில் கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்வதற்கு வருகிறார்.
அதற்கான தேதியை கட்சியின் தலைமை முடிவெடுக்கும். கூட்டணி கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிக்க உள்ளனர். இருப்பினும், எங்களது கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். கிராமங்களில் முக்கிய நபர்கள், கட்சி நிர்வாகிகள் என, நேரில் சந்தித்து, வாக்குச் சேகரிக்கிறோம்.
ஊரக தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைவர் விஜயகாந்த் வர வாய்ப் பில்லை. நகராட்சி, மாநகராட்சி தேர்தலின் போது, அவர் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது, என்றனர்.