மதுரையில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

மதுரையில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Updated on
1 min read

மதுரையில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

மதுரை புதுநத்தம் சாலை நாராயணபுரம் பகுதியில் தனியார் பல்பொருள் அங்காடி இருக்கிறது. இந்த அங்காடிக்கு மதுரை காளவாசல், குதிரைப்படை உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்றிரவு (ஞாயிறு இரவு) மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையை ஊழியர்கள் இரவு 10 மணியளவில் பூட்டியுள்ளனர். நள்ளிரவில் கடையிலிருந்து நெருப்பும் புகையும் வருவதைப் பார்த்து உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தல்லாகுளம் தீயணைப்பு அலுவலகத்திலிருந்து முதலில் 3 வாகனங்கள் பின்னர் 4 வாகனங்கள் என 7 வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்புத் துறை அதிகாரி சிவகுமார் தலைமையிலான வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடைக்குள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்ததால் அதிகாலையிலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in