மதுரையில் வெற்றி வாய்ப்பு வார்டுகள் எவை?- தலைமைக்கு பட்டியல் அனுப்பும் காங்கிரஸ்

மதுரையில் வெற்றி வாய்ப்பு வார்டுகள் எவை?- தலைமைக்கு பட்டியல் அனுப்பும் காங்கிரஸ்
Updated on
1 min read

மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனாலும், வெற்றி வாய்ப்பு வார்டுகள் குறித்த தகவல்களை சேகரித்து, கட்சியின் தலைமைக்கு அனுப்பும் பணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கியது. தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள் கூட்டம், கூட்டமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தற்போதைக்கு தேர்தல் விறுவிறுப்பு இல்லையென்றாலும், வார்டுகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் அதிமுக, திமுக கட்சிகள் தங்களது கூட்டணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துகின்றனர்.

விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் அந்தந்த கட்சிகளின் மாவட்ட, நகர தேர்தல் பொறுப்பாளர்கள் நேர்காணல் நடத்துகின்றனர். தேர்தல் பணிகள் குறித்து மூத்த தலைவர்கள் வியூகம் சொல்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியிலும் நகர், புறநகர் பகுதியில் விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் நேர்காணல் செய்கின்றனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் தங்களுக்கான வார்டுகளில் வெற்றி வாய்ப்பு, சமுதாய ரீதியான வாக்குகள் எண்ணிக்கை, செல்வாக்கு, தேர்தல் செலவினம் போன்ற 10க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு பதிலைப் பொறுத்து இறுதி பட்டியல் தயாரிக்கப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "திமுக கூட்டணியில் நாங்கள் உட்பட 5-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.

மதுரை நகரை பொறுத்தவரை 100 வார்டுகளில் 75 வார்டுகளில் திமுகவும், எஞ்சிய 25 சதவீதம் கூட்டணி கட்சிகளும் விட்டுக்கொடுக்க அவர்கள் திட்டமிடுகின்றனர்.

இதன்படி பார்த்தால் எங்களுக்கு 10 அல்லது 12 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிட்டும். 12 வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி வாய்ப்புள்ள வார்டுகள், அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செல்வாக்கு, வெற்றி வாய்ப்புக்கான காரணம், மக்கள் மத்தியில் பேசப்படும் நபர், தேர்தல் செலவுகளை தலைமையை எதிர்பார்க்காமல் செலவிட தகுதியானவரா என, பல்வேறு வகையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறோம்.

நேர்காணலில் இது குறித்த தகவல்களை சேகரிக்கிறோம். இதனடிப்படையில் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒன்றை கட்சியின் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவோம். ஒதுக்கப்படும் வார்டுகளை இழந்திடாமல் தேர்தல் பணி செய்வோம். நிர்வாகிகள், தொண்டர்களை ஒத்துழைக்கவேண்டும்" என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in