

தமிழக உள்ளாட்சியில் எதிர்க்கட்சியாக கூட திமுகவால் வரமுடியாது என, திருமங்கலத்தில் அமமுகவினர் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
முதல்வர் , துணை முதல்வர் உத்தரவுப்படி, மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருமங்கல்த்தில் நடந்தது. கள்ளிக்குடி ஒன்றிய அமமுக செயலர் சஞ்சய் காந்தி, ஒன்றிய பொருளாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் ,அமைச்சருமான ஆர் பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
அவர்களை வரவேற்று அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசுகையில், ”அதிமுக ஆட்சி இன்று போகும் நாளை போகும் என, ஜோசியம் கூறியவர்கள் மத்தியில் இந்த ஐந்தாண்டு மட்டுமின்றி, வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.
அந்தளவுக்கு நம்பிக்கை பெற்ற இயக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சியால் மாற்று கட்சியினர் தினந்தோறும் அதிமுகவில் இணைக்கின்றனர்.
3 ஆண்டுகளாக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு விருது பெற்றுள்ளது. 3 ஆண்டுகளில் ரூ. 930 கோடிக்கு நிதியில் 4,865 ஏரி, கண்மாய்கள் குடிமராமத்து செய்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பேரிடர் காலங்களில் எப்படி மக்களுக்கு பணியாற்றவேண்டும் என, உலகிற்கே எடுத்துக்காட்டும் வகையில் தமிழக பேரிடர் மீட்பு துறை இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது.
இது போன்ற சத்தமில்லாமல் சாதனையை செய்கிறோம். இதைக்கண்டு பொறுக்க முடியாத முக. ஸ்டாலின் களங்கம் சுமத்த நினைக்கிறார். அவரின் எண்ணம் ஈடேறாது.
இன்னும் ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் இந்த இயக்கத்தைத் தொட முடியாது. உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது முக.ஸ்டாலின் தடுக்க தொடர்ந்து சதி செய்கிறார். மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு பொய்யான அறிக்கைவிட்டார்.
அவர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். உள்ளாட்சியிலும் நாங்களே வெல்வோம் என்ற என்ற பயம் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.
அவர் உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடாது என, நினைக்கிறார். ஏற்கனவே 2016ம் ஆண்டு நீதிமன்ற சென்றார். தற்போதும் சென்றார் ஆக இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த முயன்றவர் அவர். சட்டத்தின்படி தேர்தலை நடத்திக்காட்டுவோம்.
அவருக்கு உண்மையில் தைரியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டியது தானே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது. மக்கள் அதற்கான தீர்ப்பை அளிப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலர் அய்யப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.