

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான கார்த்திகைத் தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வலம் வந்தார். அதன் பிறகு, சிம்மவாகனத்தில் பிடாரியம்மன் உற்சவமும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் அடுத்தடுத்த நாட்களில் நடை
பெற்றன.
இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை 6.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்க, மங்கள இசை ஒலிக்க மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
கொட்டிய மழையிலும் திரண்டிருந்த பக்தர்களின் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ முழக்கம் விண்ணை முட்டியது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் கந்தசாமி, டிஐஜி காமினி, எஸ்பி சிபி சக்ரவர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை வெள்ளி விமானங்களிலும் இரவு மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
மகா தீபம்
விழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதியில் வரும் 10-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மூஷிக வாகனத்தில் விநாயகரும் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் இன்று காலை மாட வீதியில் வலம் வருகின்றனர். பின்னர், வெள்ளி இந்திர விமானங்களில் இன்று இரவு பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர்.