

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீரென இன்று (வியாழக்கிழமை) காலை முதல் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில், உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வழக்கமாகவே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கடும் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி காவல் ஆணையருக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை உறுதி செய்ய மறுத்த மதுரை காவல் ஆணையர் அலுவலகம், வழக்கமாக டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதுபோலவே இம்முறையும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழிகளில் ஒன்றான தெற்கு ஆவணி மூல வீதியில் காலை முதலே 250 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம், துணை ஆணையர் ஆகியோர் நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுச் சென்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதனால் தீவிரவாத அச்சுறுத்தல் உண்மையோ பீதி ஏற்படாமல் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
இதுதவிர மதுரை அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள இன்னும் சில திருக்கோயில்களிலும் வழக்கத்தைவிட இன்று கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி வழக்கில் அண்மையில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஐ எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.