

நடிகர் ராகவா லாரன்ஸ் பொதுச்சேவை செய்து வருவதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அவர் பெயரில் போலியான ஐடியை உருவாக்கி பல இடங்களில் பண மோசடி செய்துள்ளதாக அவரது நற்பணி மன்றப் பொதுச் செயலாளர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடனக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர் என்று உயர்ந்தவர். ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை என்கிற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வருகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் உதவி வருகிறார்.
பலருக்கும் வீடு கட்டவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். ராகவா லாரன்ஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலம். இதை பயன்படுத்திக்கொண்ட ஒரு கும்பல் அவரது பெயரைல் போலி ஐடி ஒன்றை உருவாக்கி ராகவா லாரன்ஸ் கேட்பதுபோன்று பணம் வசூல் செய்து மோசடி செய்து வந்துள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற நிர்வாகிகள் இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இது தொடர்பாக லாரன்ஸ் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் சங்கர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
“ராகவா லாரன்ஸின் பெயருக்கும் புகழுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும் மர்ம நபர்கள், இணையதளம் மூலமாக போலியான ஐடியைப் பதிவு செய்துள்ளனர். நான் தான் ராகவா லாரன்ஸ் என்று தவறான முறையில் பணம் வசூல் செய்வது மற்றும் வீடு கட்டித் தருகிறேன் எனத் தெரிவித்து பெங்களூர், சேலம், ஊட்டி, ராமநாதபுரம், கொளத்தூர், வடபழனி போன்ற இடங்களில் ஏமாற்றியுள்ளனர்.
பொதுச்சேவையே தனது வாழ்வு என வாழ்ந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் தங்கள் மூலமாகத் தெரிவிப்பது என்னவென்றால் பொதுச்சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றால் உண்மையான அறக்கட்டளை முகவரி அறிந்து உதவி செய்யவும்”.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையரிடம் அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.