

சென்னை
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி மற்றும் அமைப்புத் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவை குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கு அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையேற்கிறார். இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
அதிமுகவில் அணிகள் இணைந்த பின் நடைபெறும் 2-வது பொதுக்குழுக் கூட்டமான இதில், 370-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து700-க்கும் மேற்பட்ட பொதுக்குழுஉறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனித்தனியாகஅழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகிகளுக்குஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தரும் முதல்வர், துணை முதல்வரை வரவேற்க திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பி.பெஞ்சமின் சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டா ரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, புதிய மாவட்டங்கள் உருவாக்கம், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணித்து தமிழகத்துக்கு புதிய முதலீடுகள் மற்றும் நிதியை பெறுவதற்கு முயற்சிகள் எடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.
இதுதவிர உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார். இதுதவிர, சில நிர்வாகிகள் இரட்டை தலைமை குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர். இவை குறித்தும், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் குறித்தும், அமைப்புத் தேர்தலைநடத்தி அதிமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.