

மகாராஷ்டிராவில் தற்போது அமைந்துள்ள ஆட்சி இந்திய நாட்டின் இறையாண்மை, மக்கள் கொடுத்த தீர்ப்பை அவமதிக்கின்ற செயல் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவசேனாவைப் பழிவாங்க வேண்டும் என்பதற்கு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி விரைவில் வரும். உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (நவ.23) சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
"மகாராஷ்டிராவில் இன்று காலை அவசர அவசரமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கே தெரியாமல் ஒரு சதிதிட்டம் தீட்டி தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக இருக்கும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இந்திய நாட்டின் இறையாண்மையை, மக்கள் கொடுத்த தீர்ப்பை அவமதிக்கின்ற செயலாகும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எங்கள் கட்சி ஒருபோதும் பாஜகவை ஆதரிக்காது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். ஏற்கெனவே சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கின்ற நேரத்தில், சிவசேனாவுடைய முதல்வர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரக்கூடாது என்பதற்காக பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
ஆளுநரைக் கைப்பாவையாக ஆக்கி இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். சரத் பவார் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஆக்குவதற்கு சிவசேனா எம்எல்ஏக்கள் போட்ட கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தி அஜித் பவார் பதவிப் பிரமாணம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். அஜித் பவாரையும் சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.
பாஜகவினரின் வேலை மாற்றுக்கட்சியில் இருப்பவர்களை இழுப்பதும், மாற்றுக்கட்சியினரை வைத்து ஆட்சி அமைப்பதும், அறுதிப் பெரும்பான்மை இருக்கின்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதும் என ஜனநாயகப் படுகொலையை பல மாநிலங்களில் செய்து வந்ததை, இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் அறங்கேற்றியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ஆளுநர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றம் செய்துள்ளனர். அதன் இறுதிக்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்றது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, அம்மாநில மக்களை ஏமாற்றும் வேலையை பாஜக செய்துள்ளது.
எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்பதற்காக ஆளுநர்களையெல்லாம் கைபொம்மையாக்கி இதனைச் செய்துள்ளனர். அஜித் பவாருடன் சென்ற 3 எம்எல்ஏக்கள் திரும்பி வந்துள்ளனர். இப்போது ஆட்சி அமைத்த பட்னாவிஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. ஆகவே அது ஒரு மைனாரிட்டி அரசு. ஆளுநர் எப்படி இதற்கு உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை.
இதனால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிவசேனாவைப் பழிவாங்க வேண்டும் என்பதற்கு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி விரைவில் வரும். சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைத்து, உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார்.
ஆளுநர்கள் பிரதமர், அவர்கரின் சகாக்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஜனநாயக மரபை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். இரவில் கடிதம் கொடுக்கப்பட்டு, விடியற்காலை பதவியேற்க வேண்டிய அவசியம் என்ன? இதில் இருந்து பாஜகவின் சதித்திட்டம் தெளிவாகத் தெரிகிறது’’.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.