

கிருஷ்ணகிரி வழியாக லாரியில் கடத்த முயன்ற 17 டன் ரேசன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவிகுமார் தலைமையிலான போலீஸார் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒசூா் நோக்கிச் சென்ற லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 17 டன் ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த அஜித் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேசன் அரிசியைக் கடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 17 டன் ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா். தொடர்ந்து கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஓட்டுநர் அஜித்தைக் கைது செய்ததுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.