திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொப்பரையை சீரமைக்கும் பணி தொடங்கியது

திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் 28-ம் தேதி இரவு தொடங்குகிறது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.

அதன்பிறகு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 10-ம் தேதி கோயில் வளாகத்தில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

அன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை காணலாம். இந்நிலையில், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பர்வத ராஜ குல சமூகத்தைச் சேர்ந்த மண்ணு நாட்டார் தலைமையிலான குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொப்பரை சீரமைப்புப் பணி நிறைவு பெற்றதும், ஓவியர் மூலம் வர்ணம் பூசப்பட்டு, ஆண் மற்றும் பெண் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘அர்த்தநாரீஸ்வரர்’ படம் வரையப்படும். பின்னர் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்படவுள்ளது. 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை, நான்காவது ஆண்டாக பயன்படுத்தப்படவுள்ளது குறிப் பிடத்தக்கது.

நெய் காணிக்கைஅண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படுகிறது. இவை, அனைத்தும் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படும். அதன்படி, கோயில் 3-ம் பிரகாரத்தில் யானை மண்டபம் முன்பு நெய் காணிக்கை தொகைக்கான வசூல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ ரூ.250, அரை கிலோ ரூ.150, 250 கிராம் ரூ.80 என்ற அடிப்படையில் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், நேரடியாக நெய் காணிக்கை செலுத்த ராஜகோபுரம் மற்றும் கொடி மரம் அருகே சிறப்பு மையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in