

உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.15) வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில் தமிழகத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இடுபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற அதேநேரத்தில், உற்பத்தி செய்கிற விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காத அவலநிலையில் விவசாயிகள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் யூரியா உரத்திற்கு தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆனால், அதேநேரத்தில் தமிழகத்திலிருந்து கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு உரங்கள் கடத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
தமிழகத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்திற்கு யூரியா உரத்தின் தேவை 6 லட்சம் மெட்ரிக் டன். இந்த இலக்கை பூர்த்தி செய்கிற அளவில் மத்திய அரசு, மாநில அரசுக்கு உரங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மானிய விலையில் வழங்கப்படுகிற யூரியாவின் விலை ரூபாய் 266.
ஆனால், 45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியா வெளிச் சந்தையில் ரூபாய் 1555 என்ற விலையில் விற்கப்படுகிறது. மானிய விலையில் உரத்தைப் பெறுகிற விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் மண் வள அட்டையை அங்கீகாரம் பெற்ற உர முகவர்களிடம் காண்பித்துதான் உரத்தை மானிய விலையில் பெற்று வருகிறார்கள்.
தமிழக அரசிடம் போதுமான கையிருப்பு இருக்கும் நிலையில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு என்ன காரணம்? இது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதா? மானிய விலையில் விற்கப்படுகிற யூரியா, கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகக் கூறப்படுவது உண்மையா? கேரள மாநிலத்தில் உள்ள மரத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு யூரியா மூட்டை ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படாத யூரியாவை கேரள மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்கப்படுகிற நிலை ஏற்பட்டதுதான் உரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் இரா. துரைக்கண்ணு மறுத்துப் பேசுவது மிகவும் வியப்பாக இருக்கிறது.
பொதுவாக, டெல்டா மாவட்டங்களில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த அவலநிலையைப் போக்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொத்தாம் பொதுவாக தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் கூறுவதை விட ஒரு பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
தமிழகத்திற்குத் தேவையான உரத்தை முன்கூட்டியே மத்திய அரசுக்கு தெரிவித்து அதை உரிய காலத்தில் பெற்று சேமித்து வைக்காதது தான் இன்றைய உரப் பற்றாக்குறைக்குக் காரணமாகும்.
எனவே, விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்யும் காலத்தில் யூரியா உள்ளிட்ட இடுபொருள்கள் மானிய விலையில் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.