

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவில் தியாகராய நகரில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் மற்றும் நவீன சாலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக் கொள்கை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற வர்த்தக சின்னமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, ரூ.39 கோடியே 86 லட்சம் செலவில் நடைபாதை வளாகமும், ரூ.19 கோடியே 11 லட்சத்தில் 23 ஸ்மார்ட் சாலைகளும் அமைக்கப்பட்டன. இத்திட்டங்களுக்கு மொத்தம் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், திறப்பு விழா தியாகராய சாலையில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று நடைபாதை வளாகத்தையும், ஸ்மார்ட் சாலைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
சாகச நிகழ்ச்சிகள்
இதைத் தொடர்ந்து பெரிய அளவில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்தவாறு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் சைக்கிள்கள், விளையாட்டு கருவிகள், வண்ண விளக்குகள், புதுமையான இருக்கைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து பேட்டரி கார் மூலம் தணிகாசலம் சாலை வரை பயணித்து நடைபாதை வளாக அமைப்பை பார்வையிட்டார்.
செல்லும் விழியில் பல்வேறு கலைஞர்களின் சாகசங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த நவீன மழைநீர் வடிகாலையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இன்றைய தினம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக அற்புதமான, அழகான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தப் பகுதிக்கு வரும் பொதுமக்கள் எளிதாக சாலையில் பயணம் செய்ய முடிவதுடன், சாலையை எளிதில் கடந்து செல்லவும் முடியும்.
போதிய நிதி ஆதாரம்
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக 11 நகரங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இந்தச் சாலைகள் தேர்ந்தெடுப்பப்பட்டு அற்புதமாக, உலகத் தரத்துக்கேற்றவாறு இச்சாலை சீர்செய்யப்பட்டிருக்கிறது.
அதே போன்று அனைத்து சாலைகளும் படிப்படியாக சீர் செய்யப்படும். அதற்கு போதிய நிதி ஆதாரத்தைத் திரட்டி படிப்படியாக மக்களுடைய வசதிக்கேற்ப சென்னை மாநகரத்தில் சாலை வசதி செய்து கொடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, அரசு தலைமைச் செயலர் க.சண்முகம் நகராட்சி நிகர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தியாகராய சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்
நடைபாதை வளாகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தியாகராய சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாசாலையில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சந்திப்பு வரை மட்டும் அனுமதிக்கப்படும்.
பனகல் பூங்கா செல்ல விரும்புவோர், தணிகாசலம் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி, தணிகாசலம் சாலை வழியாக சென்று, வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி பனகல் பூங்கா நோக்கி செல்லலாம். பனகல் பூங்காவிலிருந்து அண்ணாசாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை, ஜி.என்.செட்டி சாலை வழியாக சென்று, வாணி மகால் சந்திப்பில் வலது புறம் திரும்பி, டாக்டர் நாயர் சாலை வழியாக சென்று, தியாகராய சாலையில் இடது புறம் திரும்பி, மா.பொ.சிவஞானம் சிலை சந்திப்பு வழியாக அண்ணாசாலை செல்லலாம்.