Published : 13 Nov 2019 08:54 AM
Last Updated : 13 Nov 2019 08:54 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம்: சட்டத்தை திருத்தி அறிவிக்கை வெளியீடு

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புறங்களில் காதுகேளாத, வாய்பேச முடியாத, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம் என்ற வகையில் உள்ளாட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்கால் தள்ளிப்போனது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவிக்காலம் 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்லை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. டிசம்பர் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்கள் அவகாசம்வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல், சின்னம் உள்ளிட்டவை தொடர்பாக அவ்வபோது அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. மேலும், வேட்பாளர்கள் தங்கள் செலவுக்கணக்கை வெளியிடுவது தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை ஆணையம் அளித்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் பட்டியலை 5 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளை தேர்தலில் பங்கேற்க வைக்கும் வகையில் உள்ளாட்சிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மாநகராட்சி மேயர், வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் காதுகேட்காத, வாய்பேச முடியாத, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டங்களின்படி, இவ்வித மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் போட்டியிட அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. சட்டங்களில் திருத்தம்இதற்கான அறிவிக்கையில், ‘தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

இந்த மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் உயர்ந்த கல்வித் தகுதியும், தொடர்பியலில் சிறந்த திறன் பெற்றவர்களாகவும் திகழ்கின்றனர். இவர்கள் தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கும் வகையில் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காது கேட்காத, வாய் பேச முடியாத மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x