

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 130 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்துள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்த யானைகள் 4 மாதங்களுக்கு மேல் முகாமிட்டு, விவசாயப் பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும், யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவங்கள், கிணற்றில் தவறி விழுந்தும், மின் வேலியில் சிக்கியும் யானைகள் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், நிகழாண்டில் சுமார் 130 யானைகள், கர்நாடக வனப்பகுதியில் இருந்து இன்று (நவ.12) தேவர்பெட்டா காடு வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்துள்ளன. இதில் தளி, ஜவளகிரி வனத்தில் பிரிந்து முகாமிட்டுள்ளன. யானைகள் எந்த நேரமும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடும் என்பதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
விளைநிலங்களுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில் தளி வனச்சரகர் நாகராஜ், வனவர்கள், வேட்டைத் தடுப்பு அலுவலர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள யானைகள் அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்தன. யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மீது மற்றொன்று அடித்து விளையாடின. இரவு நேரத்தில் விவசாயிகள் யாரும் வனப்பகுதி அருகில் விவசாய நிலங்களில் காவல் காக்க வேண்டாம். வனப்பகுதியில் விறகு பொறுக்கவோ, ஆடு, மாடுகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.