என்ஐஏ சோதனைக்குள்ளான நபர்கள் : சென்னை அலுவலகத்தில் வைத்து 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை  

என்ஐஏ சோதனைக்குள்ளான நபர்கள் : சென்னை அலுவலகத்தில் வைத்து 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை  
Updated on
1 min read

என்ஐஏ சோதனைக்குள்ளான 6 நபர்களை சென்னைக்கு வரவழைத்த என்ஐஏ அதிகாரிகள் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து அமைப்பு தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக், அன்வர், பைசல் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்கிற ரீதியில் விசாரணை நடந்தது. இதையடுத்து 7 பேர் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை அமைப்பு) மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அன்று கோவையில் உக்கடம், குனியமுத்தூர், வெரைட்டி ஹால், சென்னை, திண்டிவனம் ஆகிய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று காலை தமிழகம் முழுதும் 6 பேர் இல்லங்களில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தியது. கோவை உக்கடத்தில் சமீர் , சவுரிதீன் ஆகியோர் வீட்டிலும் சிவகங்கை இளையான்குடியில் சிராஜுதீன் என்பவர் வீட்டிலும், திருச்சி, காயல்பட்டினம் மற்றும் நாகப்பட்டினத்தில் முகமது அஜ்மல் என்பவர் வீட்டிலும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடந்தது.

கொச்சியிலிருக்கும் என்ஐஏ தலைமையில் இந்தச் சோதனை நடத்தபட்டது. இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரகசியத் தடயங்கள், புதிய தகவலின் அடிப்படையிலும், இலங்கையிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதியுடன் தொடர்பிலிருந்த தகவல் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடந்ததாக என்ஐஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

4 மணி நேர சோதனையின் முடிவில் 2 லேப்டாப், 8 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சமீர், சவுரிதீன், திருச்சி சாஹுல் ஹமீது, இளையாங்குடி சிராஜுதீன், நாகப்பட்டினம் முகமது அஜ்மல் ஆகியோரை சென்னை என் ஐஏ அலுவலகத்தில் இன்று காலை ஆஜராக உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில் சென்னை என்ஐஏ அலுவலகத்தில் சமீர், சவுரிதீன், சிராஜுதீன், சாஹுல் ஹமீது, முகமது அஜ்மல் ஆகியோர் இன்று காலை ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in