

சென்னை
குழந்தைகளை தத்தெடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரம் போட் சாலையில் உள்ள அலு மினி கிளப்பில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் ‘இந்தியாவில் குழந் தையை தத்தெடுப்பது எப்படி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத் தரங்கம் நேற்று காலை நடைபெற்றது.
கருத்தரங்கில், குழந்தையை தத் தெடுப்பவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கருத்தரங்கில், பங்கேற்று சமூக பாதுகாப்பு துறை ஆணையர் ஆர்.லால்வேனா பேசியதாவது:
நாட்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956, இளைஞர் நீதிச் சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குழந்தையை தத்தெடுப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்தவுடன் இறுதியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.
குழந்தையை தத்தெடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தைப் பார்த்து பிற மாநிலங்கள் பின்பற் றும் வகையில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. தத்து கொடுக்கப் படும் குழந்தைகளின் நிலையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தைகள் நலனுக்கான இந்திய கவுன்சிலின் துணைத் தலை வர் சந்திரா தேவி தணிகாசலம் பேசும்போது, “தத்தெடுக்க விரும் பும் பெற்றோர் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் நிலையான திருமண பந்தம் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயது வரை யுள்ள குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோரின் கூட்டு வயது அதிக பட்சமாக 90ஆக இருக்க வேண்டும். 4 முதல் 8 வயதுடைய குழந்தைகளைத் தத்தெடுக்க பெற் றோரின் கூட்டு வயது அதிகபட்சமாக 100 ஆக இருக்க வேண்டும்.
8 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தையைத் தத்தெடுக்க பெற்றோரின் கூட்டு வயது அதிக பட்சமாக 110 ஆக இருக்க வேண்டும்.
பெண் குழந்தை
பெண் குழந்தையை தனி நபராக இருக்கும் ஆண் தத்தெடுக்க இய லாது. ஆண், பெண் குழந்தையை தனிநபராக இருக்கும் பெண் தத்தெடுக்கலாம். உள்நாட்டில் தத் தெடுக்க ரூ.86 ஆயிரம் செல வாகும். வெளிநாட்டுக்கு தத் தெடுக்க 5 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவாகும்.
தத்தெடுக்க பான் அட்டை, பிறப்புச் சான்று, கணவன் மற்றும் மனைவியுடைய உடற் தகுதிச் சான்று, ஆண்டு வருமானச் சான்று, திருமண பதிவுச் சான்று, பணிபுரிவதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். குழந்தையைத் தத்தெடுக்க www.cara.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியான நபர்களுக்கு சீனியாரிட்டி அடிப் படையில் குழந்தை தத்து கொடுக்கப்படும்’’ என்றார்.