

சென்னை
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் என்எல்சி நிறுவனம் இணைந்து நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நடப்பு ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம், ‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போட்டியில் 89 பள்ளிகளைச் சேர்ந்த 844 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் முதுநிலைப் பிரிவில் (7 முதல் 10-ம் வகுப்பு வரை) தாம்பரம் சீதா தேவி கரோடியா இந்து வித்யாலயா பள்ளி மாணவர் பி.எஸ்.சாஸ் அருண், கே.கே.நகர் விமலா வித்யாலயா பள்ளி மாணவி ஜெ.தர்ஷிவினி, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஹரிணி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
இளநிலை பிரிவில் (3 முதல் 6-ம் வகுப்பு வரை) தாம்பரம் எம்சிசி கேம்பஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.ஜெம்ரீஸ் ஜான், செங்கல்பட்டு சிஎஸ்ஐ ஹில்டா மெட்ரிக் பள்ளி மாணவி பி.யுவ, வேளச்சேரி நவதீஷா மாண்டிசோரி பள்ளி மாணவர் என்.சிவநாதன் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.
இதுதவிர 2 பிரிவுகளிலும் தலா 7 பேர் சிறப்பு பரிசுகளை வென்றனர். இவர்களுக்கான பரி சளிப்பு விழா சென்னை ‘இந்து தமிழ் திசை' அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில பாரத சாரணர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் ஆர்.இளங்கோவன், என்எல்சி இந்தியா நிறுவன கூடுதல் பொதுமேலாளர் (கண் காணிப்புத் துறை) டி.சத்யமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இளங் கோவன், ‘‘கல்வி மட்டுமே அழியாத சொத்து. அதை மனதில் வைத்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அதனுடன் உங்களிடம் உள்ள ஓவியம் போன்ற கலைத் திறன்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். சிறுவயது முதலே நேர்மையுடன் வாழ உறுதியேற்று கொள்ளுங்கள்’’ என்றார்.
போட்டியின் நடுவர்களாக செயல்பட்ட ஓவிய ஆசிரியர்கள் கே.சாமுவேல், ஆர்.இளங்கோ மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச் சியில் கலந்துகொண்டனர்.