

அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் இணையதள வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மொபைல் வங்கிசேவை (மொபைல் பேங்கிங் சர்வீஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியதாவது: மாறிவரும் நவீன சூழ்நிலைக்கேற்ப, இந்திய அஞ்சல் துறையும் தனது வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மொபைல் வங்கி சேவையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்த வங்கி சேவை வசதி கொண்ட (கோர் பேங்கிங் சர்வீஸ்) அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அத்துடன், இணையதள வங்கி (நெட் பேங்கிங்)சேவையை வைத்திருக்க வேண்டும். தனிநபர், இரு நபர்கள் இணைந்து தொடங்கிய சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் வங்கி சேவையைத் தொடங்கலாம். கிளை அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் வங்கி சேவையைத் தொடங்க முடியாது.
மேலும், இந்தச் சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இ-மெயில் முகவரி, பான் கார்டு, மொபைல் எண், வாடிக்கையாளரின் சரியான பெயர், பிறந்ததேதி, தந்தையின் பெயர், முகவரி, மொபைல் எண், பான் கார்டு எண் உள்ளிட்ட சரியான விவரங்களை வைத்திருக்க வேண்டும்.
மொபைல் வங்கி சேவையைப் பெற ஒருங்கிணைந்த வங்கி சேவைஉள்ள அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த சேவையைப் பெற பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை இச்சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணை வேறு எந்த சேவைக்கும் பயன்படுத்தக் கூடாது.
விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் மொபைல் வங்கி சேவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங் என்ற செயலியை (ஆப்) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.
இருப்புத் தொகை அறியலாம்
இச்சேவையைப் பயன்படுத்தி மொபைல் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு நிதி (ஆர்.டி.), தொடர் வைப்பு நிதியில் பெற்றுள்ள கடன், கால வைப்பு (டைம் டெபாசிட்), பொது வருங்காலவைப்பு நிதி (பிபிஎப்), பொது வருங்கால நிதியில் பெற்றுள்ள கடன், தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் உள்ள இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் இருந்து மற்றொரு அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். அத்துடன், சேமிப்புக் கணக்கில் இருந்து தொடர்வைப்பு நிதி கணக்கு, தொடர் வைப்பு நிதியில் பெற்றுள்ள கடனுக்கான மாதத் தவணை, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பொதுவருங்கால நிதியில் பெற்றுள்ள கடனுக்கான மாதத் தவணை ஆகியவற்றுக்கு பணம் செலுத்தலாம்.
அத்துடன், மொபைல் வங்கி சேவையைப் பயன்படுத்தி தொடர்வைப்பு, கால வைப்பு கணக்குகளைத் தொடங்கவும், காசோலைக்கான பணம் வழங்குவதை நிறுத்துவது குறித்தும் கோரிக்கை அனுப்பலாம்.
மொபைல் வங்கி சேவை குறித்து புகார்கள் ஏதேனும் இருந்தால் 1800-425-2440 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது dopebanking@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம். இவ்வாறு ஆனந்த் கூறினார்.