

புதுச்சேரி
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித், பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி இன்று (அக்.26) செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி இருக்கும் குழந்தையைப் பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு அதற்கு பாடுபட்டு வருகின்றது. புதுச்சேரியில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதை விவசாயத்துறை அதிகாரிகள் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவம் தமிழக பகுதிகளில் பரவி வருகின்றது. அது தடுக்கப்பட வேண்டும்," என்றார்.