Last Updated : 24 Oct, 2019 11:56 AM

 

Published : 24 Oct 2019 11:56 AM
Last Updated : 24 Oct 2019 11:56 AM

என்.ஆர். காங்கிரஸுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி

என்.ஆர். காங்கிரஸுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

மாநிலத் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காங்கிரஸ்-திமுக கூட்டணி சார்பில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலைச் சந்தித்தோம். எங்கள் கூட்டணியில் ஜான்குமார் போட்டியிட்டார். காமராஜர் நகர் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொகுதியில் அவருடைய பணிகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். தொகுதியைப் பொறுத்தவரை மக்கள் வளர்ச்சி திட்டங்களைக் கேட்கின்றனர். ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து புதுச்சேரி அரசுக்குத் தொல்லை கொடுத்து வருவது, மக்கள் நலத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவது, வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலிலும் அது வெளிப்பட்டது. தற்போது காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் அது வெளிப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து ஓரணியாகத் திரண்டு தேர்தல் பணியாற்றினோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரமும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் 3-ல் 2 பங்கு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம். 3-ல் 1 பங்கு வாக்குகளை என்.ஆர்.காங்கிரஸ் பெற்றுள்ளது. இது எங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அவர்கள் எதிரிக் கட்சியாக செயல்படக் கூடாது என்று கூறினேன். தற்போது நாங்கள் ஜான்குமாருடன் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சியினர் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள் என உள்ளனர்.

11 பேரை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ரங்கசாமி தன்னிடம் உள்ள எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கட்சியை விட்டு சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னையும், தன் கட்சியையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆட்சிக் கவிழ்ப்பு பற்றியே கூறி வந்தார்.

சட்டப்பேரவைக்கு வருவதில்லை, மக்கள் பிரச்சினைகளைப் பேசுவது இல்லை, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து எந்தவிதப் போராட்டமும் செய்ததில்லை, ஆளுநர் கிரண்பேடி எங்களுக்குத் தொல்லை கொடுப்பதை அவர் எதிர்த்துக் கேட்டதில்லை. இதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாகத்தான் மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். என்.ஆர். காங்கிரஸுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x