

சென்னை
நுங்கம்பாக்கம் பூங்காவில் நடந்த புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில், தோப்பில் முகமது மீரானின் சிறுகதையை முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வாசித்தார்.
நகர மேம்பாட்டையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் மூலம் கலைஞர்கள் வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக யுனெஸ்கோவின் படைப்பாற்றல் திறன் கொண்ட நகர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டமைப்பு பட்டியலில் சென்னை மாநகரம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமைப்பு மற்றும் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பூங்காக்களில் இசை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சுதந்திர தினப் பூங்காவில் சென்னை சிட்டி ஆஃப் மியூசிக் அமைப்பு சார்பில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை நூல் தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறுகதைகளை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசித்தார். பொழுதுபோக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பூங்காவுக்கு வந்தவர்கள் அதை வெகுவாக ரசித்தனர்.
தொடர்ந்து, மெய் கலைக்கூடம் சார்பில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம், பாடலுடன் கூடிய நடனம் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன், மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் பேரன் முகமது அபு ஷாருக் பங்கேற்றனர்.