

திருவள்ளூர்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஜனவரியில் இருந்து இதுவரை 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று (அக்.16) பீலா ராஜேஷ் நேரில் சந்தித்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி, பூச்சியியல் நோய்த் தடுப்புத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நோயின் தன்மை குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், திருவள்ளூர் மாவட்டத்தில் 282 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் எனவும் அது தமிழகத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.