

திருநெல்வேலி
``நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அச்சாரமாக இருக்கும்” என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, நாங்குநேரியில் வைகோ பேசிய தாவது:
இப்பகுதியில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை கருணாநிதி அறிவித்து, நிதிஒதுக்கீடும் செய்து திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். ஆனால், அதிமுக அரசு அதை கிடப்பில் போட்டுவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும், தந்தை தொடங்கிய வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தனயன் நிறைவேற்றுவார். குளங்களுக்கு கால்வாய் அமைத்து தரவேண்டிய கோரிக்கை நிறைவேற்றப்படும். நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் முடங்கியிருக்கிறது. அத் திட்டத்தை புத்துயிர்பெற செய்ய, அதற்காக குரல் கொடுக்க கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக கூறினாலும் தொழிற்சாலைகள் வரவில்லை. இது குறித்த வெள்ளை அறிக்கை கொடுக்க அதிமுக அரசு தயாராக இல்லை. தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் அரசியல் மாற்றத்துக்கான அச்சாரமாக இருக்கும். மக்கள் அளிக்கும் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் என்றார் வைகோ.