3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2,047 கனஅடி நீர் வெளியேற்றம்: 3 மாவட்டக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on

கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.9) காலை 8 மணி நிலவரப்படி கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.82 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு 1,368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,368 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 11 தடுப்பணைகளை ரசாயனக் கழிவு நுரை பொங்க கடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீருடன், நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் தண்ணீரின் அளவு நேற்று காலை 2,247 கனஅடியாக அதிகரித்து, படிப்படியாக மதியம் 12 மணியளவில் 2,500 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 2,047 கனஅடியாக குறைந்தது.

அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 42.50 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை மதகுகள் பழுதாகியுள்ள நிலையில் அணையின் மொத்த உயரமான 52 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாததாலும், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 2,047 கன அடி தண்ணீரையும் அப்படியே அணையின் பிரதான மதகின் முதல் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்குத் தடை

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்வதால், அணைக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரைப்பாலம் அருகே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆறு பாயும் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டுகோள்

தென்பெண்ணை ஆற்றுக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டும் என தருமபுரி மேல்பெண்ணையாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் மெய்யழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையினால் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஏரி, குளம், குட்டை, கால்வாய் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம். அத்துடன் ஆற்றின் கரையோரம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நின்று செல்ஃபி எடுப்பது மிகவும் அபாயகரமானது. மழையின் அளவு மேலும் வலுப்பெறும் நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர் நிலைகள் பக்கம் செல்லா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in