

நெல்லை
அதிமுக வேட்பாளர் வெ.நாராயணனை வெற்றி பெறச் செய்தால் ஒன்றரை ஆண்டில் ஐந்தாண்டு வளர்ச்சி உறுதி என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலை ஒட்டி உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
பட்டர்புரம், முத்தாலபுரம், ஏமன் குளம், ஆலங்குளம், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது அவர், "நாங்குநேரி வளர்ச்சியடையாத தொகுதியாக உள்ளது. அதிமுக வேட்ல்பாளரை ஆதரித்தால் அவர் மக்களின் அனைத்து தேவைகளையும் அரசிடம் பெற்றுத் தந்து இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்தாண்டு காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவார்.
வேட்பாளர் நாராயணன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவர் இவருக்குத்தான் இந்த பகுதி மக்களின் தேவைகள் புரியும். எதிர்க்கட்சி வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். அவருக்கு இந்தப் பகுதி மக்களைப் பற்றி புரியாது அவர்களின் நிலை தெரியாது. ஆகையால் உங்களைப் புரிந்த உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரியுங்கள்" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், "தமிழகத்தை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எக்காரணம் கொண்டு மானியங்கள் ரத்தாகாது" என்று கூறினார்.